தென்காசி: அரசு சார்பில் தென்காசியில் நடத்தப்பட்ட உலக சாதனை வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியின் நடுவே, திமுக பிரச்சார வாகனம் புகுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் இன்று (ஏப்.07) தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக சாதனை வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியானது பிரம்மாண்டமான முறையில் நேற்று (ஏப்.06) நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 7000 பெண்கள், 500 நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட 7,500 பேர் பங்கேற்றனர்.
இந்த பேரணியானது சென்று கொண்டிருந்த போது போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், தொடர்ந்து இந்த பேரணி சென்று கொண்டிருக்கும்போது, திமுக பிரச்சார வாகனம் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளது. மேலும் பேரணியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்களிடம் திமுக பிரச்சார வாகனத்தில் வந்த நபர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திமுகவினர் உள்ளே புகுந்து எப்படி பிரச்சாரம் செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்தது.
இதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.