கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆயிரக்கணக்கானோர் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குனியமுத்தூர் 88-வது வார்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி வார்டு அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டு, வேலையை புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.
இது குறித்து பெண் தூய்மை பணியாளர்கள் கூறுகையில், "கடந்த ஒரு வருடமாக தூய்மை பணியாளராக 88-வது வார்டில் பணிபுரிந்து வருகிறோம். இதே வார்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமானால் அதற்கு பணம் கட்ட சொல்லுகிறார்கள். பணம் தரவில்லையென்றால், பாலியல் இச்சைக்கு இணங்குமாறு செய்யுமாறு கூறுகின்றனர். அதற்கு உடன்படாவிட்டால் அடுத்த வார்டுக்கு பணியை மாற்றி மாற்றி வழங்குகின்றனர்.
அப்படியே வேறு வார்டிக்கு சென்றால் அங்கும் அதே தொல்லை கொடுக்கின்றனர். மதுக்கடை(wine shop) பகுதியில் உள்ள சாலையை தூய்மைப்படுத்துவதற்கு பெண் தூய்மை பணியாளரையே அனுப்புகின்றனர். அதை பற்றிக் கேட்டால், பணி இப்படித்தான் இருக்கும். விருப்பமிருந்தால் வேலை பாருங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் என்று கூறுகின்றனர். வாட்ஸ் அப் மூலமாக, இரவு வரை பணி செய்து கொடுங்கள் என்கின்றனர்.பெண் பணியாளர்களிடம் இரட்டை அர்த்த வார்த்தைகள் பேசுகின்றனர்” என்று குற்றம் சாட்டினர்.
மேலும், மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் உதயகுமார் என்பவர் பெண் பணியாளர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், பணிக்கு வந்தால் பணிக்கு வரவில்லை என்று பொய்யாக குற்றம் சுமத்தி அவர்களின் சம்பள பணத்தை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இது மட்டுமில்லாமல் உதயகுமாரின் சித்தப்பா வேலுச்சாமி என்பவர், செய்வினை செய்து விடுவதாகவும் மிரட்டுவதாக தெரிவித்தனர். ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உதயகுமார், வேலுச்சாமி உள்ளிட்ட 4 பேரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உதயகுமார் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் அவர்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் தற்கொலை முயற்சி! பதற்றத்தில் கோவை ஆட்சியர் அலுவலகம்