கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நேற்று (மார்ச் 9) மாலை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுப்பையா மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டமானது 61வது நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் சுயேட்சை கவுன்சிலர் தேவகி மீது நகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வார்டு கவுன்சிலர்கள் நாச்சி, மாணிக்கராஜ், மகேஸ்வரி, கலைச்செல்வி ஆகியோர் கூட்டம் தொடங்கும் முன்பும், உறுதிமொழி வாசிக்கும் பொழுதும் வெளிநடப்பு செய்து, காது, வாய், மூக்கு, முகம் ஆகியவற்றை பொத்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பின் கூட்டம் தொடங்கியவுடன், அவர்கள் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
சாலையோரம் இருக்கும் வியாபாரிகளுக்காக கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சித் தலைவரிடம் தெரிவிக்காமல் நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க உள்ளதாகக் கூறி, மதிமுக கவுன்சிலர் துரை பாய், கவுன்சிலர் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளரிடம் விவாதித்தார். அதற்கு ஆணையாளர், “உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். இதற்கு மேல் பிரச்னை கிளப்ப வேண்டுமானால், கிளப்பி கொள்ளுங்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை” என கவுன்சிலர்களைப் பார்த்து பேசினார்.
பின், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளரைப் பார்த்தவாறு, “அதிகாரிகள் தங்கள் அறைக்குள் என்ன செய்கிறீர்கள் என்று நான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் தினத்தை முன்னிட்டு, நகராட்சித் தலைவர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டதில் முறைகேடு; அதிமுக கவுன்சிலர் தர்ணா!