திருவாரூர்: நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "காங்கிரஸ் கட்சி கடந்த 1952 தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட 10 ஆண்டுகள் தவிர்த்து இந்தியாவில் ஆட்சி செய்தது. நேரு, இந்திரா காந்தி, மன்மோகன்சிங் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் பிரதமர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்கள்.
ஆனால் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக ஊழலுக்கு எதிரானவர் என்று தன்னை கூறிக்கொண்டு தேர்தல் பத்திரம் என்கின்ற விஞ்ஞான ஊழலைச் செய்துள்ளார். இந்த விஞ்ஞான ஊழலுக்கு அமலாக்கத்துறை சிபிஐ போன்றவற்றைக் காலையில் ரெய்டு நடத்த சொல்லி மாலையில் ரைடு நடத்திய கம்பெனிகளிடமிருந்து தேர்தல் பத்திரம் என்கின்ற நன்கொடையைப் பெற்று ஊழல் செய்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை ரூ.60 முதல் ரூ.65 வரை இருந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் இந்த விலையை மேலும் குறைப்பதாகக் கூறி எண்ணெய் நிறுவனங்களுக்கே விலை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரத்தை வழங்கி இன்று பெட்ரோல் டீசல் விலை ரூ.100க்கும் அதிகமாகிவிட்டது.
அதே போல் சிலிண்டர் விலை ரூ.450லிருந்து ரூ.1000 தாண்டி விட்டது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கின்ற மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறது. மொத்தத்தில் இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.50 லட்சம் கடனை சுமத்தியதுதான் மிச்சம்.
மக்களுக்கான அரசு என்றால் மோடி தமிழகத்தை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தான் கொடுத்த தேர்தல் அறிக்கையில் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றிவிட்டுத் தேர்தல் அறிக்கையில் சொல்லாத இல்லம் தேடி கல்வித் திட்டம், இன்னுயிர் காப்போம், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் மக்களின் தேவையை அறிந்து நிறைவேற்றி உள்ளார்.
மோடி ஆட்சியில் வங்கிக் கணக்குகள் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் எனக் கூறி இருக்கின்ற பணத்தையும் பிடித்துக் கொள்கின்றன. அவ்வாறு ஏழை மக்களிடமிருந்து 21 ஆயிரம் கோடியை எடுத்துள்ளார். மோடியைப் பொறுத்தவரை நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பவர். ராகுலும், ஸ்டாலினும் மக்களுக்குக் கொடுப்பவர்கள்.
எனவே எடுப்பவர் வேண்டுமா? கொடுப்பவர் வேண்டுமா? சர்வாதிகாரம் வேண்டுமா? ஜனநாயகம் வேண்டுமா? என்பதைச் சிந்தித்து இந்தியாவை மீட்க, மண்ணைக் காக்க வேண்டும் என்கின்ற நோக்கோடு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வராஜுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: விஜயின் G.O.A.T ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கவனிக்க வைக்கும் போஸ்டர்! - GOAT Release Date