சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் மற்றும் டாக்டர் அழகப்பா சாலை சந்திப்பில், 2012-இல் சில கல்லுாரி மாணவர்கள், தங்கள் கையில் கற்கள், உருட்டுக் கட்டைகளுடன் கூடியிருந்தனர். அப்போது, மாணவர்களில் சிலர், திடீரென அப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்துகள், கார் மீது கற்களை வீசியதில், பேருந்துகள் மற்றும் கார் கண்ணாடி சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வேப்பேரி காவல்துறையினர், தமிழ்நாடு பொதுச் சொத்துகள் சேதம் மற்றும் அழிவுத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், கார்த்திக் மற்றும் யானைக்கவுணியைச் சேர்ந்த சரத்குமார் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பொதுச் சொத்துகள் சேதப்படுத்திய குற்றத்திற்காக, அனைவருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் சட்ட விரோதமாக ஆயுதங்களுடன் கூடிய குற்றத்துக்கு என மொத்தம் 18 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 2020இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மாணவர்கள் தரப்பில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். காவல்துறை சார்பில், மாநகரக் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.செந்தில் ஆஜரானார். விசாரணையின் போது, சரத்குமார், விஜய், ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மீதமுள்ள 11 பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், “விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட, இந்த நீதிமன்றத்துக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
குற்றத்தில் ஈடுபட்டவர்களும், தற்போது குடும்பம் என்ற கட்டமைப்பில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற வாதத்தை ஏற்புடையது அல்ல. மேல்முறையீடுதாரர்கள் சாலையில் ஒன்று கூடி, காட்டுமிரண்டித்தனமாக நடந்ததோடு, பொதுப் போக்குவரத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்தி, அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு, இந்த நீதிமன்றம் கருணை காட்டினால், அது சமூகத்துக்கு தவறான உதாரணமாகிவிடும். எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரமலான் பண்டிகை; 1,145 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்! - Ramzan Special Buses