சென்னை: சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனி குடியிருப்பு பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர்களிடம் 100 நைட்ரவேட் (Nitra vet) வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர், 21 வயதுமிக்க பி.காம் மூன்றாம் ஆண்டு மாணவர் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரத்து 700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், வெளி மாநிலங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து, போதைக்காக கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..! - Veera Talks Anchor