திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஓர் தம்பதியின் மகள் வசந்த பிரியா வயது 24. இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண்ணின் தந்தையுடைய அக்கா மகனான மகாதேவன் (26 ) என்பவரும், வசந்த பிரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரின் காதலுக்கும் இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவனின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தினால் இளம்பெண் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து ஒருமித்த முடிவாக திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது இன்னொரு மகளின் வீட்டிற்கு இன்று சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பிய இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த மகாதேவன், பெண் வீட்டிற்கு வருகை புரிந்து தன்னை மீண்டும் காதலிக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுத்தாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் குத்தி உள்ளார். இத்தாக்குதலால் ரத்த சொட்ட சொட்ட இளம்பெண் அலறியபடி வீட்டிலிருந்து ஓடி வந்தவுடன் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்ட நிலையில் மகாதேவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இரண்டு மாணவர்கள் கைது!
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை அவரது நெருங்கிய உறவுக்கார இளைஞரே கத்தியால் குத்திய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.