தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றாலம், தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு, தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மாதங்களிலும் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்யும் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகப் பகுதியில் உள்ள தென்காசி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயதுடைய அஸ்வின் என்ற சிறுவன் பலியான நிலையில், பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, பழைய குற்றால அருவி படிப்படியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியதை அடுத்து, அப்பகுதியில் விளைநிலங்கள் உள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றால அருவி வனத்துறை வசம் சென்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பழைய குற்றால அருவி பகுதியில் வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கத் தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், தற்போது பழைய குற்றால அருவி பகுதியில் உள்ள காப்பு காட்டில் நெகிழியை முற்றிலுமாக ஒழிக்கும் வண்ணம் வனத்துறை சார்பில் நெகிழி பயன்பாட்டைத் தடுக்க சோதனை சாவடி அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஏற்கனவே பழைய குற்றால அருவி வனத்துறை வசம் சென்றால் அப்பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களை வாழ்வாதரமாக கொண்டுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறும் நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் வனத்துறைக்கு தற்காலிக சோதனை சாவடி அமைக்க அனுமதி அளித்திருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க நிதி ஒதுக்கீடு