சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (30). இவர் மீது கடந்த ஆண்டு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்று பதிவாகியது. இதையடுத்து, போலீசார் முத்துசாமியை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர். ஆனால், முத்துசாமி போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே, முத்துசாமி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் முத்துசாமியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் முத்துசாமி மீது எல்ஓசியும் போட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கணினி மூலம் பரிசோதித்து, பயணிகளை விமானத்தில் ஏற அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது!
அப்போது, தலைமறைவு குற்றவாளியான கோவையைச் சேர்ந்த முத்துசாமி துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்துள்ளார். குடியுரிமை அதிகாரிகள் முத்துசாமியின் பாஸ்போர்ட் ஆவணங்களை கணினியில் பரிசோதித்த போது, இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, குடியுரிமை அதிகாரிகள் உடனடியாக முத்துசாமியின் துபாய் பயணத்தை ரத்து செய்ததோடு, அவரை வெளியில் விடாமல் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிம் ஒப்படைத்து காவலில் வைத்தனர். மேலும், குடியுரிமை அதிகாரிகள் கோவை மாநகர காவல் ஆணையருக்கு தேடப்படும் தலைமறைவு குற்றவாளி முத்துசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சென்னை விமான நிலையத்திற்குவந்த கோவை மாநகர தனிப்படை போலீசார், முத்துசாமியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்