கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அண்மையில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் தங்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா அல்லது திருத்தம் செய்ய வேண்டியது எனில் திருத்தம் செய்து கொள்ளலாம் என கால அவகாசம் கொடுத்தது.
அதுபோல், கட்சியினரும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்துக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, அரசியல் கட்சியினர் தங்களுடைய வார்டில் உள்ள தங்களுக்குச் சாதகமான அல்லது கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர், முகவரி சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்றத் தேர்தலில் 13,64,945 பேர் வாக்களித்த நிலையில், 64.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவைப் பார்வையிட வந்த பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தங்களுக்குச் சாதகமான ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் விடுபட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், "கோவை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. கணவருக்கு ஒரு இடத்திலும், மனைவிக்கு ஒரு இடத்திலும் வாக்கு இருக்கிறது. சில இடங்களில் ஒருவருக்கு இருக்கிறது. மற்றவருக்கு இல்லை. ஒரே வாக்குச்சாவடியில் 830 பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த முறை திட்டமிட்டு ஒரு லட்சம் பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
ஒன்று, இரண்டு என இருந்தால் பிரச்னை இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல்லடம், சூலூர், கோவை என அனைத்துப் பகுதிகளிலும் இந்த பிரச்னை இருக்கிறது.
ஒரே இடத்தில் நிறைய வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு கேட்டிருக்கிறோம். மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் இருந்தும் சரியான பதில் இல்லை. ஒரு வாக்குச் சாவடிக்கு 20 ஓட்டுகளுக்கும் மேல் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு இருப்பதில் அரசியல் உள்ளே இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.
பெரும்பாலும் பாஜகவிலிருந்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளம் பகுதியில் ஒரு இடத்தில் 200 ஓட்டு நீக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு லட்சம் வாக்காளர்களைக் கணக்கிடும் பணி நடைபெற உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்தி குமார் பாடி கூறுகையில், "ஒரு லட்சம் வாக்காளர்கள் விடுபட்டு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில பேர் இடம் மாறி இருந்தாலோ அல்லது வேறு பக்கம் சென்று இருந்தாலோ அவர்களின் பெயர் விடுபட்டிருக்கும். ஏற்கனவே, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதைச் சரி பார்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை மூத்த வழக்கறிஞர் பாலமுருகன் கூறுகையில், "அண்ணாமலை தோல்வி பயம் காரணமாக இவ்வாறு கூறுகின்றார். தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது. அவற்றைச் சரி பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி கால அவகாசமும் அளிக்கிறது.
அப்போது எல்லாம் இதனை சரி பார்க்காமல் இருந்தது பாஜகவினர் தவறு. ஒவ்வொரு பூத்திற்கும் ஆட்களைப் பணியமர்த்தி திமுக, அதிமுக தங்களுடைய வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்கும் நிலையில், பாஜகவிற்கு பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாததால் வாக்காளர் பட்டியலை அவர்கள் பார்த்திருக்க முடியாது.
தொகுதி முழுவதும் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்பது அசாதாரணமானது. அது நடைபெற வாய்ப்பே இல்லை. ஒரு சில இடங்களில் ஆட்கள் வெளியூர் சென்றிருந்தாலோ அல்லது இடம் மாறி இருந்தாலோ அவர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்புகள் உள்ளது. ஆனால், பாஜக தலைவர் சொல்வது போல் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்ய நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகப்படியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் என எந்த அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பாஜக மாநிலத் தலைவர் மட்டும் இதனைத் தெரிவித்துள்ளது தோல்வி பயமே" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரக்கோணம் மக்களவைத் தொகுதி; 300 சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - LOK SABHA ELECTION 2024