கோயம்புத்தூர்: கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் MyV3 Ads நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. ஆன்லைன் விளம்பரம் பார்த்தால் அதற்குரிய பணம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும், இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தடுத்து வந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், MyV3 Ads நிறுவனம் குறித்து கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "MyV3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த விஜயராகவன் என்பவர் பட்டப்படிப்பு படித்தாக கூறி போலி சான்றிதழ் வைத்து ஏமாற்றியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாகவும் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச்சாட்டுப் பதிவுக்கு உள்ளானவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும், அந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் பெயரிலும், தனி நபர்கள் முதலீடு செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.
பொதுமக்கள் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்குறிப்பிட்ட MyV3 Ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்ட விரோதமானது மற்றும் மோசடியானது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும், இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு: இம்மாதம் விண்ணப்பிக்கக் கடைசி நாள்!