கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி 87வது வார்டிற்கு உட்பட்ட வசந்தம் நகர், பி.கே.ஜி நகர், வஹாப் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எல் அண்ட் டி நிறுவனம் (L&T) இப்பணிகளை மேற்கொள்கிறது. இப்பகுதியில் சில பணிகள் முடிந்தும் முழுமையாக மூடாததாலும், பல்வேறு இடங்களில் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், குடிநீர் விநியோகமும் சரிவர இல்லை எனவும், வரக்கூடிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், சாலைகள் அனைத்தும் பழுதாகியுள்ளதால் வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் கூட முடியாத சூழல் இருப்பதாகவும், அடிக்கடி வழுக்கி விழுந்து அடிபட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், இப்பிரச்சினை குறித்து 87வது வார்டு திமுக கவுன்சிலர் பாபுவிடம் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை என்றும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்களிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் பேசிய போது, வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் வராததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், நாய்கள் தொல்லையும் அதிகமாக இருப்பதாகவும் கூறினர். கோயம்புத்தூர் பகுதியின் முக்கிய நீராதரமாக திகழும் சிறுவாணி ஆற்று நீர் பல மாதங்களாக தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், ஆழியார் அணை நீர் முழுவதும் குளோரினேற்றம் செய்யப்பட்ட நீராக இருப்பதால், அதை பருக முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், அனைத்து வரிகளைக் கட்டினாலும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதாகவும், இதற்கு எதற்கு தாங்கள் வரி கட்ட வேண்டும், எங்களுக்கு பட்டாவே இல்லை என கூறிவிடுங்கள் என ஆதங்கத்துடன் கூறினர். மேலும், இந்த சாலை போராட்டத்திற்கு பின்னும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அனைத்து வார்டு மக்களும் இணைந்து மாநகராட்சி அலுவலத்தை முற்றுகையிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கர்நாடகாவில் காணாமல் போன கோவை இளைஞர்.. தாயிடம் சேர்த்த ஈடிவி பாரத் செய்தியாளர்கள்.. குவியும் பாராட்டுகள்! - Missing man found by ETV reporters