கோயம்புத்தூர்: கோவையில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவந்த 3 மாதம் மற்றும் 10 மாதமே ஆன இரண்டு குழந்தைகளுக்கும், தொடர் காய்ச்சல் இருந்து வந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு காவசாகி (kawasaki disease) என்ற அரியவகை நோய் கண்டறியப்பட்டது.
இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெறி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்கக்கூடிய இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இதற்காக அளிக்கப்படும் எதிர்ப்பு சக்தி மருந்து ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில், காவசாகி நோயால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கும் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இம்யுனோ குளோபுலின் (Immune Globulin) என்ற மருந்து செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குழந்தைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில், குழந்தைகள் தற்போது அரியவகை நோயான காவசாகி நோயில் இருந்து மீண்டு நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனை தரப்பில் இது குறித்து கூறியபோது, "கடந்த ஒருவார காலத்தில் காவசாகி நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகள் மட்டும் அல்லாது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் காவசாகி நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளுக்கு தல ரூ.1 லட்சம் வீதம், ரூ.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் தொடச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும், தமிழக அரசின் உதவியோடு கோவை அரசு மருத்துவமனையில் காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்து: 'விதிகளை மீறினால் குண்டாஸ் பாயும்' - விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை