கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு என்னும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததன் அடையாளங்கள் தான் இது.
குறிப்பாக, ஜிஎஸ்டி பிரச்சினையால் தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது. இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. அதனுடைய பதில் தான் இந்த தீர்ப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் இந்த பெருமை அனைத்தும். முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்திக் கொடுப்பார்.
மிகப்பெரிய தொழில் நகரமான கோயம்புத்தூர் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எங்களுக்கு வாக்களித்ததால், விமான நிலையம், ரயில் நிலையம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவோம். அதிமுகவின் செயல்பாடு தான் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம்.
ஜிஎஸ்டி பிரச்சினை, சிறுகுறு தொழிற்சாலை பிரச்சினை, விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலையம் உள்ளிட்டவை சீரமைப்பதோடு, மக்கள் என்ன எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்களோ அதை நிறைவேற்றுவோம். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு வெற்றி” என்றார்.
இதையும் படிங்க: ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.. தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்! - Lok Sabha Election Results 2024