திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில் இருந்து ஆனைமலை ஓன்றியம் மஞ்சநாயக்கன் புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன் மற்றும் அதே பகுதியில் டீக்கடை நடத்தும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 நபர்கள் கடந்த 28ஆம் தேதி கள்ளச்சாராயம் வாங்கிச் சென்று குடித்து, வாந்தி, பேதி ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனை போலீசார் வழக்குப்பதிவு: இச்சம்பவம் தொடர்பாக, ரவிச்சந்திரன் மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில், கள்ளச்சாராயம் குடித்ததாக கோவை மாவட்டம் ஆழியாறு காவல்துறையினர் மாவடைப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊர் பெண்களிடம் கடிந்து கொண்ட காவல்துறையினர்?: இதற்கிடையே, கடந்த 28ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேல் மாவடைப்பு மழைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிரடியாக நுழைந்த திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் வீட்டு கதவுகளை தட்டி தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கள்ளச்சாராயத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு: இதனால் கோபமடைந்த மக்கள் காவல்துறையினரை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கிராமத்தலைவர் மற்றும் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், காவல்துறையினர் சோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர், பழங்குடியினர் அனைவரையும் ஓர் இடத்தில் அழைத்து கள்ளச்சாராயத்தின் தீமைகள் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறையின் விளக்கம்: இந்நிலையில் ஏற்கனவே, திருப்பூர் மாவட்ட காவல்துறை மகேந்திரன் மற்றும் ராமச்சந்திரனுக்கு கள்ளச்சாராயத்தால் உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை எனவும், மாவடைப்பு மலைக்கிராமத்தில் கள்ளச்சாராயம் இல்லை எனவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட காவல்துறையின் நடவடிக்கை: ஆனால், கோவை மாவட்ட காவல்துறையினர் கள்ளச்சாராயம் குடித்து தான் இவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என மாவடைப்பு மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த ராமன் மீது நேற்றிரவு வழக்குப்பதிவு செய்திருப்பது மாவடைப்பு மலைவாழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயத்தால் உடல்நலக்குறைவு? மலைவாழ் மக்களிடையே பரபரப்பு: முன்னதாக, சாராயம் வாங்கி குடித்த பின்பு ஐந்து பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது, இதற்கு அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் இல்லை என திருப்பூர் மாவட்ட காவல்துறை தரப்பிலும், கோவை மாவட்ட காவல்துறை தரப்பில் ஐந்து பேரும் குடித்தது கள்ளச்சாராயம் தான் எனவும் இதனால் தான், உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன? - Illicit Liquor Issue in Tirupur