கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு இன்று (ஆகஸ்ட் 6) மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இன்று காலை திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைக்கப்பட்டு அமைச்சர் கே.என் நேரு மற்றும் முத்துசாமி, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் கட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் திமுக கூட்டணியில் உள்ள 96 கவுன்சிலர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ராஜினாமா செய்த முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்கவில்லை. இதில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மேயர் பொறுப்பு கிடைக்காத நிலையில், சோகத்துடன் சக கவுன்சிலர்களுடன் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அமைச்சர் நேரு, “10.30 மணிக்கு கோவை மேயர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். அதன்பின் உங்கள் முன்னிலையில், மேயர் நாற்காலியில் நமது மேயர் வேட்பாளர் அமருவார். முதலில் கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சில பேருக்கு இந்த தேர்தல் ஆலோசனை முடிவுகள் குறித்தும், வேட்பாளர் குறித்தும், சங்கடங்கள் இருக்கின்றது. அதை நான் தீர்த்து வைப்பேன்” என உறுதியளித்தார்.
பின் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ள வேட்பாளரை வெற்றி அடையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அப்போது திடீரென 63 வார்டு கவுன்சிலரும், பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன், “நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் ஒதுக்குகின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு அமைச்சர் அவரை பேசவிடாமல், "உட்காருங்கம்மா", என அமர வைத்ததுடன், "உங்கள் ஆதங்கங்களை நாங்கள் தீர்த்து வைக்கின்றோம்" என்றார்.
கூட்டம் முடிந்து வெளியேறிய கவுன்சிலர் சாந்தி முருகன், “நாங்கள் நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வருகிறோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவரை மத்திய மண்டல குழு தலைவர் மீனாட்சி, கணவர் முருகன் மற்றும் சக கவுன்சிலர்கள் சமரசப்படுத்தி அழைத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஐந்தாவது மாநில திட்டக் குழு கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் என்னென்ன?