கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு சாமி தரிசனம் செய்வதற்காக கோனியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தார். உடன் பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்திருந்தனர். அப்போது வீர கணேசன் தாயாரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.
1989இல் இந்து முன்னணியைச் சேர்ந்த வீர கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவருடைய தாயார் கோனியம்மன் திருக்கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது உடன் இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்ததாகத் தெரிகிறது.
அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது, பூசாரிக்கு காணிக்கை அளிப்பதற்காக பணத்தைக் கொடுத்ததாகவும், ஆனால் பூசாரி அங்கிருந்து சென்றதற்கு பிறகு நானே அந்த பணத்தை வைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில் ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நான் இந்த தேர்தலில் ஒரு ரூபாய் கொடுக்க மாட்டேன் எனவும், குறைந்த செலவில் தேர்தல் நடந்த தொகுதியாக கோவையைக் காண்பிப்பேன் என உறுதி அளித்த நிலையில், அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி, தனது X வலைத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோவின் உண்மைத் தன்மை கண்டறியப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “இங்கு கொடி வாங்கினால் எங்கள் கட்சிக்கு வெற்றிதான்..” மதுரை கீழ ஆவணி மூல வீதியில் நடப்பது என்ன? - Political Flags Sale In Madurai