சென்னை: சென்னை, விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதை பொருள் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அனைத்து சர்வதேச விமான பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 7ம் தேதி ஆப்பிரிக்க நாடான, எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கென்யா பெண்ணிடம் சோதனை
அப்போது அந்த விமானத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அப்பெண்ணின் உடமைகள் மற்றும் அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
வயிற்றுக்குள் கேப்சல்
இதையடுத்து அவரை முழுமையாக பரிசோதித்த போது, அவரின் வயிறு பகுதி வீங்கியது போல் இருந்து உள்ள்ளது. இதனால் அந்தப் பெண் பயணியை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்சல் மாத்திரைகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெண் பயணியை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்களின் உதவியுடன் இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருக்கும் 90 கேப்சல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்தனர்.
சினிமா பாணியில் கொக்கைன் கடத்தல்
அதன் பின்பு அந்த கேப்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மிகவும் விலை உயர்ந்த கொக்கைன் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். 90 கேப்சில்களிலும் மொத்தம் 1.424 கிலோ கிராம் கொக்கைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 14.2 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தப் பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பெண் சர்வதேச போதை கடத்தல் கும்பலில் குருவியாக செயல்பட்டது தெரிய வந்தது. மேலும், இதே போல் சில நாட்களுக்கு முன்பு மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.
மேலும் இந்த கென்யா நாட்டு பெண் பயணி கடத்திக் கொண்டு வந்த போதைப் பொருட்களை சென்னையில் யாரிடம் கொடுக்க இருந்தார் என்ற விசாரணையும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மீது போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.