சென்னை: இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாள்களில் விலக உள்ளதைத் தொடர்ந்து, தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில், தென்னிந்தியப் பகுதிகளில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்.15) மற்றும் நாளை மறுதினம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 200 மி.மீ-க்கும் மேல் அதாவது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பருவமழையை எதிர்கொள்ள அரசுடன் கழகமும் களத்தில் நிற்க வேண்டும்" - திமுக தலைமை உத்தரவு!
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு மேல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நிவாரண முகாம்களை தயார் செய்வது, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைப்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்