சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 28) சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மதுவிலக்கு, காவல் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது.
அப்போது, தமிழக சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய கந்தர்வ கோட்டை தொகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்றார்.
மேலும், சென்னை கடற்கரையில் மீண்டும் சீரணி அரங்கத்தை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து, லாக்கப் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தேனாம்பேட்டையில் சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது, குறுகிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "தேனாம்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி விசாரணை மாற்ற வேண்டும் என்கிற சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.