சென்னை: 2026 தேர்தல் மட்டுமல்ல, அடுத்தவரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும், அதில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், முன்னாள் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் வேணு இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதனையடுத்து, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக திமுக இருக்கிறது. மிசா சட்டத்தில் எங்களுடன் கைதாகி இருந்த போது பாதுகாவலராக, நண்பராக விளங்கியவர் வேணு. அவரின் திருமணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இன்று அவரின் பேரன் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமை கொள்கிறேன்.
நடந்து முடிந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருதை வேணுவுக்கு வழங்கியுள்ளோம். திமுகவைப் பொறுத்தவரை, மக்கள் பணியாற்றுவதில் சிறந்து விளங்கி வருகிறோம். மக்களுக்காக உறுதிமொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாதனைகளையும் திமுக செய்து வருகிறது. மக்களால் போற்றப்படும் ஆட்சியை திமுக செய்து வருகிறது.
ஜோசியராக மாறிய எடப்பாடி: ஆனால், மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி சரிந்து கொண்டிருப்பதாக பொறாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். திமுகவின் கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்று கற்பனையில் எடப்பாடி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தற்போது அவர் ஜோசியராகவே மாறிவிட்டார். எப்பொழுது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க: “திமுக கூட்டணியில் அதிருப்தி தொடங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
கொள்கை கூட்டணி: எங்கள் கூட்டணி பதவிக்காக, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக உருவான கூட்டணி. பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே? அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்னை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சியை வளர்க்காமல், வளர்ந்திருக்கக் கூடிய கட்சியைப் பார்த்து ஜோசியம் செய்து கொண்டிருக்கிறார்.
சேலத்திக்கு ஓடியவர் எடப்பாடி: திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்பொழுது ஆட்சி என்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால் இன்றைக்கும் மக்களை சந்தித்து மக்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கேட்டு அறிந்து அதற்குரிய பணிகளை செய்கிறோம். சென்னையில் மழை வந்த நிலையில், நான் துணை முதலமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேரில் சென்று குறைகளை கேட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தோம்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி மழை வந்தவுடன் சேலத்திக்கு ஓடியவர் விட்டார். 2026 தேர்தல் மட்டுமல்ல அடுத்தவரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும், அதில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என முதலமைச்சர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்