சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ரூ.3,555.53 கோடி மதிப்பீட்டில் 483 பணிகளுக்கு நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்திற்கான அனுமதி வழங்கிடும் கூட்டம் நேற்று (டிசம்பர் 4) சென்னையில் நடைபெற்றது.
"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" (Ungal Thoguthiyil Muthalamaichar Scheme) என்ற திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (டிச.4) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் 2022 மே 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110-இன் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை அறிவித்தார்கள். இதுகுறித்து, முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 2022 ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச் செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 2022 செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது. பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அனைத்து துறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன.
கடந்த 2023 - 2024ஆம் ஆண்டில் 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ரூ.10,968.65 கோடி மதிப்பீட்டில் 786 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 748 பணிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. அதில், 233 பணிகள் நிறைவேற்றப்பட்டும், 515 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. மீதம் உள்ள 38 பணிகளுக்கு ஆணை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சென்னையில் புதிதாக 41 குளங்கள்; வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி!
2024 - 2025ஆம் ஆண்டுக்கான பணிகளை தேர்வு செய்திடும் குழு கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் அக்டோபர் 10, 2024 அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடப்பாண்டில் ரூ.3,555.53 கோடி மதிப்பீட்டில் 483 பணிகளுக்கு நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.