சென்னை: சென்னை வியாசர்பாடி ஜே.ஜே.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார் (30). இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர், தனது நண்பரான மற்றொரு வழக்கறிஞர் சரத்குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 11 பேர் உட்பட 13 பேர், புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பிரியாணி கடைக்கு சாப்பிடச் சென்றுள்ளனர்.
அப்பொழுது, அவர்கள் பீப் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, சிலர் கறியில் இருந்து கெட்ட வாடை வருவதாகவும், பிரியாணி கெட்டுப்போய் உள்ளது எனவும் கடை நடத்துபவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது கடையில் இருந்தவர்களுக்கும், பிரியாணி சாப்பிட வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின்னர், பிரியாணி கடையை நடத்தி வந்தவர்கள் போன் செய்து மேலும் சிலரை வரவழைத்து, பிரியாணி சாப்பிட வந்த இரு வழக்கறிஞர்கள் உட்பட ஆட்டோ ஓட்டுநர்களை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் வழக்கறிஞர்கள் சரத்குமார், பிரேம்குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களான தீபக் மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடையில் பணிபுரியும் ஊழியர்களான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரஃபியுல்லா ஷெரிப், பாபு பாஷா, மொய்தீன், பரத் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வகுப்பறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்.. டிசி வாங்கிய பெற்றோர்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?