சுங்குவார்சத்திரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா தொழிற்சாலை . இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இவர்களது கோரிக்கைகள் குறித்தான 6 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மேலும், தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலையில் உள்ள மற்றொரு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக நேற்று அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு முன்னாள் மாநில செயலாளரும் , நெய்வேலி சுரங்க செயலாளர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து தொழிலாளர்களிடையே உரையாற்றினார்.
அதில் , கடந்த 1971 இல் சிம்சன் போராட்டம் நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் கருணாநிதி மௌனம் காத்த நிலையில், தொழிலாளர்களே வெற்றி பெற்றனர். மேலும், பன்னாட்டு கம்பெனிகள் தமிழகத்தில் அமைப்பதில் தடை ஏதும் இல்லை எனவும் ஆனால் அவர்கள் இங்கு அமைக்கும் நிலையில் தமிழக அரசு தொழிலாளர் சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும், அரசு தொழிலாளர்களை போராடும் நிலைக்கு ஒருபோதும் தள்ளக் கூடாது என மீண்டும் ஒருமுறை அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!
மேலும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொது செயலாளர் சுகுமாரன், கோபிக்குமார் உள்ளிட்டோர் தொழிலாளர்களிடையே உரையாடினார்.
சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துக்குமார், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் தொடர் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து வருகிறது. சிஐடியு தொழிற்சங்கம் அங்கீகரிக்க வேண்டும் என சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 21ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய என்எல்சி சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் , தொழிலாளர்களின் கோரிக்கைக்கு சாம்சங் நிறுவனம் செவி சாய்க்காமல், தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத ஒரு கும்பலை கொண்டு வந்து அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தத்தை போட்டுள்ளனர். அது ஒப்பந்தமே கிடையாது, அதற்கு சட்ட அந்தஸ்து கிடையாது, போராட்டத்தை உடைப்பது புதிய சங்கங்களை உருவாக்குவோம் என சொல்வதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரானது, இதில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்றார்.
எனவே சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களின் போராட்டத்தில் தலையிட்டு, சமூக தீர்வு காண வரும் 21 ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளோம். மேலும், 70 தொழிற்சாலைகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த போராட்டம் இருக்கும்'' எனவும் ராமகிருஷ்ணன் கூறினார்.