திருச்சி: வ.உ.சி குறித்த அவதூறு பேச்சுக்கு எம்.பி ஆ.ராசா மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா, சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக எம்பி ஆ.ராசாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வ.உ.சி அமைப்பினர் மற்றும் வெள்ளாளர் அமைப்பினர் பலரும் அவரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருச்சி தில்லைநகர் பகுதியில் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் நேற்று (பிப்.12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர்.செந்தில் பிள்ளை, "வ.உ.சிதம்பரம் குறித்தும், சோழிய வெள்ளாளர் மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் ஆ.ராசா எம்பி பேசியுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற பேச்சுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆ.ராசா எம்பி தொடர்ந்து இதுபோல அவதூறாகப் பேசி வருகிறார். இந்த பேச்சுக்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். வ.உ.சி குறித்தும், சோழிய வெள்ளாளர் குறித்தும் அவதூறாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி, திமுகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோம்.
அடுத்தக்கட்டமாக மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் வரும் பிப்.25ஆம் தேதி நடைபெற உள்ளது. வேளாளர்கள் மற்றும் சோழிய வெள்ளாளர்கள் இணைந்து நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த உள்ளோம். இதில் எடுக்கப்படும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் செல்வோம். தமிழகத்தில் 154 உட்பிரிவுகளில், இரண்டு கோடிக்கும் அதிகமான வேளாளர்கள் மற்றும் வெள்ளாளர்கள் உள்ளனர்.
கடந்த காலத் தேர்தலில், முக்கிய வெற்றி வாய்ப்பைத் தரக்கூடிய இடத்தில் வெள்ளாளர் சமூகம் இருந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதைக் கண்டிப்பாக செய்வோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய வீடியோவை வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!