தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ளது சித்திரக்குடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் பேராசிரியர் சத்யா என்பவரது வயல் உள்ளது. இவரது வயலில் பாதி புதைந்த நிலையில் நந்தி சிலை இருப்பதாக, வரலாற்று ஆய்வாளர் மணி மாறனிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து, வரலாற்று ஆய்வாளர்களான மணிமாறன், தில்லை கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகிய மூவரும் சித்திரக்குடி கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மண்ணில் பாதி புதைந்த நிலையில் நந்தி சிலை மற்றும் சேதமடைந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து மணிமாறன் கூறுகையில், “கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களுக்கு உட்பட்ட முத்தரையர் ஆட்சி செந்தலை எனும் ஊரை தலைமை இடமாகக் கொண்டு நடந்துள்ளது. பின்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சித்திரக்குடி லிங்கத்தடி மேடு என அழைக்கப்பட்டது.
இப்பகுதியில் வயல்வெளியில் பாதி பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி உள்ளது. இந்த நந்தியானது கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இந்த நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், ஆனந்த காவிரி வாய்க்காலின் உட்புற தென்கரையை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக பாதி புதைந்துள்ள நிலையில் சுமார் மூன்று அடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரிய சிவன் கோயில் இருந்து அழிந்து போய் இருக்கக்கூடும், பிற்காலத்தில் அந்தப் பகுதியில் புதிதாக கோயில் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது என்றார்.
மேலும், இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இரண்டு கல்வெட்டு செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளது. இவ்வூர், சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது.
சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கிய பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இப்பகுதியில் நாம் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும், அது தமிழக வரலாற்றிற்கு புதிய வெளிச்சத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எம்ஜிஆருக்கு புரட்சித் தலைவர் பட்டம் ஏற்புடையதா?