சென்னை: சென்னை அபிராமபுரம் புனித மேரி சாலையைச் சேர்ந்தவர் மாயா மோகன். இவர் மறைந்த நடிகர் சோவின் சகோதரி ஆவார். மாயா மோகன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தவர் மரிய மகேஸ்வரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார்.
இவருக்கு சொந்த ஊர் ராசிபுரம். வெளியூர் சென்றிருந்த மாயா மோகன், கடந்த 16ஆம் தேதி தான் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் வைத்திருந்த சிறிய மர பீரோவை திறக்க முயன்ற போது முடியவில்லை. சாவியைக் காணவில்லை. இதையடுத்து வீட்டுப் பணிப்பெண் மரிய மகேஸ்வரியிடம் கேட்ட போது, தேடிப் பார்த்து தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின், மாயா மோகன் கார்பெண்டரை வரவழைத்து, மர பீரோவை திறந்து பார்த்த போது தங்க, வைர நகைகள் காணாமல் போய் இருந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மாயா மோகன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். திருடு போன சம்பவம் பதிவாகும் வகையில் எந்த சிசிடிவி காட்சிகளும் இல்லாத நிலையில், வீட்டுப் பணிப்பெண் மரிய மகேஸ்வரியைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மரிய மகேஸ்வரி, நித்யா என்பவருடன் சேர்ந்து தங்க, வைர நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதில் 4 தங்க மோதிரங்கள், தங்கச் செயின், வைர மோதிரம், வைர வளையல், தங்க நெக்லஸ் உள்ளிட்ட மொத்தம் 14 சவரன் நகைகள், நான்கரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.17,200 பணம் ஆகியவற்றை திருடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் என தெரிகிறது.
இதையடுத்து வீட்டுப் பணிப்பெண் மரிய மகேஸ்வரி, நித்யா ஆகிய 2 பேரையும் அபிராமபுரம் போலீசார் கைது செய்து செய்தனர். மேலும், திருடிய நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சிறுவர், சிறுமிகளுக்கு ஒரே அறை.. அரங்கேறிய பாலியல் அத்துமீறல்.! குமரி ஓட்டல் ஓனர் உட்பட 3 பேர் மீது போக்சோ!