சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. அதில் மிக முக்கியமான ஏரியாகவும், மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரியாவும் சிட்லப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக 86 ஏக்கராக இருந்த ஏரி காலப்போக்கில் குடியிருப்பு பெருக்கத்தாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் தற்போது 46 ஏக்கர் அளவிற்கு சுருங்கியுள்ளது.
குடியிருப்புகள் ஆக்கிரமிப்பால் விவசாயம் பாதிப்பு: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஏரியின் மூலமாக சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆனால், அதன் பிறகு ஏரியைச் சுற்றிலும் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரித்து வந்ததால் விவசாயம் கைவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக சிட்லப்பாக்கம் ஏரியில் கலந்துள்ளது. இதனால், ஏரி முற்றிலுமாக மாசடைந்துள்ளது.
மேலும் ஏரியைச்சுற்றி குப்பைகளை கொட்டி குப்பை மேடுகளாக மாற்றியுள்ளனர். மேலும், ஏரி நீரில், கழுவு நீர் கலந்ததால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக அப்பகுகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், நீர்நிலை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்கள் தொடர்ந்து சிட்லப்பாக்கம் ஏரியை மீட்க பல்வேறு பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறைக்கு அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிட்லப்பாக்கம் ஏரியை மறுசீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி, படிப்படியாக சிட்லப்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டு, மாசடைந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. மேலும், ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை முற்றிலுமாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தினர்.
உலக தரத்தில் தயார்: அதனைத்தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்பு, ஏரியை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயார் செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு, சிட்லப்பாக்கம் ஏரியை உலக தரத்தில் தயார் செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
திட்டங்கள்:
- ஏரியில் மையப்பகுதியில் 2 இடங்களில் பறவைகள் அமர்வதற்கான 2 தீவுகள் அமைக்கப்பட்டது.
- ஏரி கரையின் மீது சுமார் 1 கிலோ மீட்டர் அளவில் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- ஏரியைச் சுற்றிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதில் மூலிகை தாவரங்களை வைத்துள்ளனர்.
- வனத்துறை சார்பாக 1,200 மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு திடல், சிலம்பம் பயிற்சி எடுப்பதற்கான இடம், கபடி மைதானம், யோகா செய்வதற்கான இட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- ஏரியின் வெளிப்புறப் பகுதியில் திறந்த வெளி திரையரங்கம்(Open theatre) கட்டப்பட்டுள்ளது.
- ஏரியை சுற்றி பார்க்க வரும் பொதுமக்களுக்காக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
இத்தைகைய மாற்றத்தினால், தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிட்லப்பாக்கம் ஏரிக்கு வருகை தந்து, ஏரியை சுற்றி பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏரிக்கு அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், ஏரிக்கு வரும் மக்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக ஏரி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், நடைபாதைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் இடங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பதால் அதனை உடனடியாக அமைத்து தரவேண்டும் என சிட்லப்பாக்கதை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன், ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ சாக்கடை ஏரியாக இருந்த சிட்லப்பாக்கம் ஏரி தற்போது சீரமைக்கப்பட்டு மிகவும் ரம்மியமான ஏரியாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
தாம்பரத்தின் மெரினா: சேவிங் சிட்லப்பாக்கம் லேக் (Saving Chitlapakkam Lake) என்ற திட்டத்தின் மூலமாக, ஏரியை தமிழ்நாடு அரசின் பார்வைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளோம். தற்போது மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை அதிகரிக்கும் ஒரு பகுதியாக சிட்லப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், சுற்றுலா தளமாக ஏரி மாறியுள்ளது. தற்போது தாம்பரத்தின் மெரினா என்று சொல்லப்படும் அளவிற்கு மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது.
இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 தீவினால் சுமார் 30 வகையான பறவைகள் ஏரிக்கு வந்து செல்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்லப்பாக்கம் ஏரியின் மேற்கு கரையையும், கிழக்கு கரையையும் இணைப்பதற்கான பாலம் ஒன்று அமைக்க வேண்டும். இப்பகுதியில் அதிகப்படியான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், ஏரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டுள்ள கழிவறைகள் விரைவில் திறக்கப்பட வேண்டும், மீதமுள்ள சிறிய பணிகளை முடித்து முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ சிட்லப்பாக்கம் ஏரியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதை முற்றிலுமாக தடுத்து, கழிவுநீரை வேறு பாதையில் கொண்டு சென்று விட்டோம். அதன் பிறகு ஏரியை மறுசீரமைத்து முற்றிலுமாக மாற்றி உள்ளோம். உலக தரத்தில் சிட்லப்பாக்கம் ஏரியை சீரமைத்து சுற்றுலா தளம்போல் மாறியுள்ளது.
தற்போது கூடைப்பந்து, கால்பந்து மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏரி முழுவதும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: பித்தளை பாத்திரங்களால் சருமம் பொலிவு பெறுகிறதா? ஆச்சர்யம் மிகுந்த உண்மைகள்! - Benefits of using Brass Utensils