சென்னை: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்திருந்தது. தற்போது சீனாவில் இருந்து சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக சிகிரெட் லைட்டர்களின் தடை விதிப்பு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்திய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கீதாஜீவன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து சந்திப்பு முடிந்த பின் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"மதுரையில் கனமழை பெய்திருந்தாலும் இரவு நேரத்திற்குள் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. மதுரை மாவட்ட அமைச்சர்கள் 2 பேர் முகமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 8 இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது மற்றபடி பெரிய பிரச்சனை இல்லை.
இன்று மழை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருகிறது" என்றார்.
தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடன் வாங்கி அரசு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர்,"எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை. அவருடைய பெயர் தினமும் பத்திரிக்கையில் வர வேண்டும், டிவியில் முகம் வரவேண்டும் என்பதால் எதையோ சொல்லி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. அந்த நிதியை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இன்றும் மழை தொடர்ந்தால் நாங்கள் அவ்வளவு தான்" - குமுறும் மதுரை மக்கள்!
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்: முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்திருந்தார்.