சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் (பிப்.22) இரவு இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னை வந்து சேர்ந்தனர். இதையடுத்து நேற்று தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் நடத்தினர். அப்போது தேர்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல், நடத்தும் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடன் தேர்தல் தலைமை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் 2வது நாளான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பது எப்படி?, அதற்கு எப்படிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்? துணை ராணுவப் படை பாதுகாப்பு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? அமைதியான, நேர்மையான முறையில், தேர்தலை நடத்தி முடிப்பது எப்படி? உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.