அரியலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் கூறியதாவது, “சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கி ஏறத்தாழ 50 கிராமங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தோம்.இரண்டாவது நாளாக இன்று அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம்.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டது கண்டித்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு மக்கள் பேராதரவை நல்கி வருகின்றனர். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, மக்களின் பேராதரவை பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே மத உணர்வுகளை தூண்டுவதில் செலுத்தும் அக்கறையை விட நாட்டு நலனில் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும். ஒருபுறம் பாகிஸ்தான் மறுபுறம் சீனா என்று நமது தேசத்தை ஆக்கிரமித்து வரும் அரசுகளை எதிர்க்கும் திராணி அற்றவராக பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தி இருக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பல பகுதிகளை தங்கள் தேசத்திற்கு உட்பட்ட பகுதி என்று சீன அரசு அறிவிப்பு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்கான அரசியலை மட்டுமே செய்து வருகின்றார். இந்து சமூகத்தினர், பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை உணரத் தொடங்கி விட்டனர்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக பாஜக நடத்தும் நாடக அரசியல் தான் கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவை மீட்பதை விட தற்போது அருணாச்சலப் பிரதேசத்தை மீட்பதற்கு அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை வாக்கு எந்திரத்துடன் இணைக்க வேண்டும். ஒப்புகை சீட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தரும் என்று நம்புகிறோம்.
பாஜக பத்தாண்டு காலத்தில் இதுவரை என்ன செய்தது என்று எங்கேயும் கூறியதில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் திமுகவை எதிர்ப்பது, மேற்கு வங்கம் சென்றால் மம்தா பானர்ஜியை எதிர்ப்பது என்ற வகையில் தான் அவர்களின் அரசியல் இருக்கிறது. தங்கள் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்தார்கள் என்று எந்த இடத்திலும் பேசியதில்லை. அவர்கள் சாதனை செய்திருந்தால் தான் அதை சொல்ல முடியும். அதே போன்று தமிழ்நாட்டில் அதிமுகவினர் பாஜகவை எங்கேயும் விமர்சிக்கவில்லை. அவர்களும் திமுகவை தான் விமரிசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி! - L Murugan