கடலூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதற்காக அனைத்து அரசியல் பிரமுகர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருமாவளவனும் தீவிர பிரச்சாம் செய்து வருகிறார்.
அதற்காக சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டி தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், திருமாவளவன் இல்லத்தில் நேற்று மாலை 6 மணி முதல் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரமாக சோதனை செய்த அதிகாரிகள், பிறகு முருகானந்தத்திடம் இன்று (ஏப்.10) பிற்பகல் 3 மணிக்கு கடலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து ஆஜராக வேண்டும் எனக் கூறி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐடி சோதனையின் போது திருமாவளவன் பிரச்சாரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, தகவலறிந்து வீட்டிற்கு வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், "வருமான வரி துறை அதிகாரிகள் எனது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், பெட்டியிலும் சோதனை செய்தாக தகவல் கிடைத்தது. சோதனை வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு கட்சி, பொருளாதாரம் இல்லாத ஒரு கட்சி விசிக. மாநாடாக இருந்தாலும், பேரணியாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும் மக்களிடத்தில் கேட்டு, அவர்கள் தருகிற குடைத்தொகையினை வைத்து தான் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக இப்படித்தான் இயங்குகிறோம்.
1999-லிருந்து 2024 வரை 6 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 6 சட்டமன்றத் தேர்தலை சந்தித்திருக்கிறோம். இதுவரையில் வருமான வரித்துறையினர் சோதித்ததாக சரித்திரமே இல்லை. முதல் முறை இப்படி ஒரு நெருக்கடியை தருகின்றனர். வேட்பாளர் தங்கி இருக்கிற இடத்தில் எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை இடுவது, ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல் என்று தான் கருது வேண்டியுள்ளது. உளவியல் அடிப்படையில் ஒரு தாக்குதல் நடத்துவதாக தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பாஜக அல்லது பாஜகவுக்கு சக்திகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபோன்ற சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை. அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒரு கட்சி ஆட்சியில் இருந்து அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும். இது அரசியலில் சகஜமான ஒன்று. அதனால் ஆளுங்கட்சி ஏவுவதற்கு ஏற்ப செயல்படுவது அதிகாரிகள் பொறுப்புக்கு உகந்தது அல்ல.
விசிக வெறும் இரண்டு தொகுதிகள் போட்டிருக்கிற கட்சி; பொருளாதாரத்திற்கு எந்த வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை என்பது நாட்டு மக்களுக்கே தெரியும், வருமான வரித்துறைக்கு இது எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை. இது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நெருக்கடிகளையெல்லாம் கடந்து நாங்கள் இந்த தேர்தலை வெற்றிகரமாக முடிப்போம். பாஜக மற்றும் சன் பரிவார அமைப்புகளை கொள்கை அடிப்படையில் விமர்சிக்கும் இயக்கமாக விசிக இருப்பதால், இதுமாதிரியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற அச்சுறுதல்கள் எனது பயணத்தை ஒருபோதும் தடை செய்யாது என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சோதனையில் அவர்களே ஏதாவது வைத்து எடுத்தால் மட்டும் தான் உண்டு. வேட்பாளர் இல்லத்தில் நேரடியாக வந்து இதுபோன்று சோதனைகள் நடந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுவே நமக்கு முதல் முறை, இதுபோன்ற இடி, ஐடி, சிபிஐ போன்றவைகளையெல்லம் ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டது தான். இதுவரை அவர்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதான் முதல் முறை; பாஜகவை எதிர்த்து பேசக்கூடாது, அரசியல் செய்யக்கூடாது என்பதற்காக இது போன்ற அச்சுறுத்தல்களை செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.