அரியலூர்: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் மிகவும் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலும் நடைபெற்று முடிந்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் களம் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் 12வது சுற்றில் 68 ஆயிரத்து 238 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே கணித்தபடி 40க்கு 40 வெற்றி உறுதியாகிவிட்டது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி 225 முன்னிலையில் இருக்கின்றன. சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஒரு மாயை, அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் அதிக பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் எண்ண வேண்டியுள்ளது. அது எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இந்த சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடக் கூடாது என்று பலர் கூறினார்கள். நான் இந்த தொகுதியில் தான் நிற்பேன். எம்மண்ணின் மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று உறுதியாக நின்றேன்.
இன்றைக்கு 12 சுற்றுகளிலேயே 60 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கின்றேன். விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள். மக்களுக்கு நன்றி. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் முன் நின்று செய்வார்கள்.
உத்தர பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும் என்று எண்ணி கொண்டிருந்தார்கள். ராமர் கோயில் அரசியல் மற்றும் அதனையொட்டி அவர்கள் முன்னெடுத்த எந்த அரசியலும் வெற்றி பெறவில்லை. உத்தர பிரதேசத்தில் பாதிக்கு பாதிக்கு இடங்களை இழங்க நேர்ந்திருக்கின்றது. இது உத்தரபிரதேச மக்கள் பாஜகவிற்கு கொடுத்துள்ள அதிர்ச்சி. அவர்கள் சற்றும் எதிர்பாராத தோல்வி. அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணி தோல்வி அடைந்திருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அதற்கான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இப்படி பாஜகவில் பல தலைகள் உருளும் நிலை ஏற்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “கோவை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்” - கணபதி ராஜ்குமார் உறுதி! - Lok Sabha Election Results 2024