விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் அதிக அளவில் வருகை புரிந்தனர். செவ்வாய்க் கிழமை அன்று திருநங்கைகள் கோவில் பூசாரிகளின் கைகளால் தாலி கட்டி கொள்ளும் நிகழ்வும், மறுநாள் அரவான் பலியிடுதல் மற்றும் திருநங்கைகளுக்கு தாலியறுத்தல் மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு நிகழ்வாக 'மிஸ் கூவாகம்' எனும் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெறும். இதில் கலந்து கொள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள திருநங்கைகள் எனப் பலர் வருவது வழக்கம்.
சென்னை திருநங்கைகள் நாயக்குகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகைகள் அம்பிகா, தீபா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பொன்முடி கூறியது: விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "திரு என்றால் ஆண்களை குறிக்கும், நங்கை என்றால் பெண்களைக் குறிக்கும். இது பாலினங்களையும் கொண்டுள்ள இவர்களுக்கு திருநங்கை என்று பெயர் சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
தற்போது திருநங்கைகள் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு வந்துள்ள திருநங்கைகளுள் முனைவர் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். அனைவரும் சமம், சமத்துவம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதற்கு தான் இந்த நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.
வாழ்த்து தெரிவித்த நடிகர் ஸ்ரீகாந்த்: அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், "ஆண்கள்தான் பலசாலி என்று நினைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் அவர்களை விட பலசாலிகள், பெண்கள் பிரசவத்தில் தாங்கும் வலியை விட மிகப்பெரிய வலி எதுவும் இல்லை. நீங்கள் இந்த சமுதாயத்தில் எவ்வளவு வலிகளைத் தாங்கி உள்ளீர்கள். உங்களைப் போன்று வலிகளைத் தாங்கியவர்கள் இங்கு யாரும் இல்லை.
நான் தற்போது நடித்துவரும் படத்தின் பாடலில் 60 திருநங்கைகள் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும். நீங்கள் சாதித்து விட்டீர்கள், மேலும் சாதித்துக் கொண்டே இருப்பீர்கள், நீங்கள் மென்மேலும் சமுதாயத்தில் வளர என்னுடைய வாழ்த்துக்கள்" என திருநங்கைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2024 கூவாகம் அழகிகள்: மேலும், நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில், சென்னையை சேர்ந்த ஷாம்ஸு முதலிடத்தையும், புதுச்சேரியில் மருத்துவம் படித்துவரும் வர்ஷா இரண்டாவது இடத்தையும். மூன்றாம் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா ஆகியோர் வென்றுள்ளனர்.
முதல் பரிசு வென்ற ஷாம்ஸு செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்னை அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்திய என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட்க்கு நன்றி. நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் அது உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவரும்.
திருநங்கைகளுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விட்டுவிடுவார்கள். என் அம்மா காலத்தில் பாலியல் தொழில் அதிக அளவில் நடைபெற்றது. என்னுடைய காலத்தில் பாதியாக குறைந்துள்ளது. என்னுடைய மகள் காலத்தின் அது முற்றிலுமாக குறைவதற்கு நீங்கள் தான் உதவி புரிய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்.. பெரிய நந்திக்கு சிறப்புப் பூஜை வழிபாடு!