சென்னை : சென்னையில் இருந்து இன்று தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற 2 விமானங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்துள்ளன. இன்று காலை 9.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் காலை 11.30 மணி அளவில் தூத்துக்குடியில் தரையிறங்க சென்றபோது அங்கு மோசமான வானிலை நிலவியதால், தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டது. அதேபோல் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து 58 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க : தமிழ்நாடு வானிலை: தென்காசியில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை; 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
இந்த விமானம் இன்று பகல் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் தரையிறங்க சென்றபோது, அங்கு மோசமான வானிலை நிலவியதால் இந்த விமானமும், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து 2 விமானங்கள் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மூன்றாவது விமானமாக இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 60 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட தயாராக இருந்த விமானமும் தூத்துக்குடியில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதாக தகவல் வந்ததால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வானிலை சீரடைந்த பின்பு நாளை( டிச 14) விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.