சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29ஆவது நபராக ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று (செப்டம்பர் 22) தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (திங்கள்கிழமை) என்கவுண்டர் செய்யப்பட்டார். சீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காவல் ஆய்வாளர் இளங்கனியை நோக்கி சீசிங் ராஜா 2 முறை சுட்டார். நல்வாய்ப்பாக தோட்டாக்கள் காவல் வாகனத்தின் மீது பட்டது. அப்போது அங்கே இருந்த வேளச்சேரி காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக 2 முறை சுட்டார்."
"இதில் காயமடைந்த சீசிங் ராஜாவை, காவல்துறையினர் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். என்கவுண்டரில் சுட்டுகொல்லப்பட்ட ராஜா மீது 6 கொலை வழக்கு உள்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது."
"இது தொடர்பான வழக்குகளில் ஆஜராகாமல், தலைமறைவாக இருந்த காரணத்தால், இவர் 10 வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். மேலும் சீசிங் ராஜாவுக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை," எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வேளச்சேரியில் துப்பாக்கியை காண்பித்து ஒருவரிடம் பணம் பறித்த வழக்கில் கடந்த சில மாதங்களாக சீசிங் ராஜாவைத் தீவிராமாக கண்காணித்து வந்தோம். ஆந்திராவில் பிடித்தது தனிப்படைதான். இங்குள்ள காவல் ஆய்வாளர் கூறிய தகவலின் அடிப்படையில் அந்த தனிப்படை பிடித்தது."
"துப்பாக்கியை காட்டி மிரட்டும் வழக்குகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அந்த துப்பாக்கிகளை எங்கிருந்து வாங்குகிறார்கள் என்பது குறித்த விசாரணையும் மேற்கொண்டு வருகிறோம். அவரைப் பிடித்து சட்டப்படி தண்டனை தர வேண்டும் என்று தான் பிடித்து வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது," என்று கூறினார்.
கோயம்புத்தூரில் ரவுடி காலில் சுடப்பட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இவரையும் காலில் சுட்டு பிடித்திருக்கலாமே என்று செய்தியாளர்கள் எழுப்பியைக் கேள்விக்கு பதிலளித்த காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடம் முழுக்க முழுக்க இருட்டாக இருந்ததாகவும், மொத்தம் 5 காவலர்கள் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ராஜா பதுக்கி வைத்திருந்த பொருள்களை எடுக்கச் சென்ற போது, ஒரு சில நிமிடங்களில் அங்கு இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆபாச படங்கள் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றமா? - உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!