சென்னை: சென்னை திருவொற்றியூர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய 159ஏ மாநகர பேருந்தானது நேற்று டவுட்டனை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, வேப்பேரியில் சில பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொங்கிக் கொண்டும், மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி மாணவர்களைப் போல 'ரூட்டு தல' போன்று 'ஜே' என பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டே வந்ததால் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியுள்ளார்.
உடனே அராஜகத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களும் தப்பிச் சென்றதாக தெரிகிறது. பேருந்தில் பள்ளி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வேப்பேரி போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாக்கத்தியுடன் மாணவர்கள்: இதேபோல, "ரூட்டு தல" பிரச்சினை முன் விரோதத்தில் பட்டாக்கத்தியுடன் காத்திருந்த மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த 3 மாணவர்களை பிடித்து சோதனை செய்த போது புத்தக பைக்குள் 2 அடி நீளமுள் பட்டாக்கத்தி மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து 3 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தண்டையார்பேட்டை, மிஞ்சூரை சேர்ந்த மூவர் என்பது தெரிய வந்தது.
3 பேரும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. 3 பேரும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை வெட்டுவதற்காக பபட்டாக்கத்தியுடன் வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 மாணவர்கள் மீதும் ஆயுத தடை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான 3 மாநில மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி 'ரூட் தல' பிரச்சனையில் மோதி கொள்வது வழக்கம். அதன் முன் விரோதம் காரணமாக அந்த மாணவரை வெட்டுவதற்காக கத்தியுடன் வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விடாது" - செல்வப்பெருந்தகை கருத்து