சென்னை: வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023 டிசம்பர் 25ஆம் தேதி, தனிப்படை போலீசார் இருவரையும் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (பிப்.09) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோரது நீதிமன்றக் காவலை, பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!