சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி, வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட 28 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், இந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு உள்ளிட்ட வெவ்வேறு பிரச்சினைகளில் சென்னையில் உள்ள பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் பிரபல ரவுடி சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக சென்னை காவல்துறை தேடி வருகிறது.
இதையடுத்து செம்பியம் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 28 பேர், தலைமறைவாக உள்ள இரண்டு பேர் என மொத்தம் 30 நபர்கள் மீது சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: "முதல்வர் அழைத்ததால் தான் மக்கள் சென்றார்கள்; மரணங்களுக்கு அவரே முழு பொறுப்பு"
அதில் ஏ1 எதிரியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனும், ஏ 2 எதிரியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலும், ஏ3 எதிரியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் எப்படி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார்கள் என்ற தகவலையும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஏ2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருவதால் அவரை பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்போ செந்தில் துபாயில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் துபாய் சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் சென்னை காவல் துறை துபாய் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்