சென்னை: திருவனந்தபுரம் விரைவு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் நோக்கி, பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது ரயிலின் என்ஜினில் அமர்ந்தவாறு பெண் ஒருவர் சடலமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து, இன்று காலை திருவனந்தபுரம் விரைவு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி வந்தபோது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் இளம்பெண் ஒருவர், ரயில் என்ஜின் இடுக்குகளில் தலைமுடி சிக்கிய நிலையில் அமர்ந்தவாறு இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து கூக்குரலிட்டனர். உடனடியாக இதுகுறித்து ரயில் நிலைய அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ரயில்வே அலுவலர்கள் ரயிலை அங்கேயே நிறுத்தி, பெரம்பூர் ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், ரயில் என்ஜினில் சிக்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், சடலமாக மீட்கப்பட்ட பெண் அம்பத்தூர் கள்ளிக்குப்பம், யோக ஆஞ்சநேயர் தெரு பகுதியைச் சேர்ந்த கேத்ரின் ஷீபா(22) என்பது தெரியவந்தது. இவர் வேப்பேரியில் உள்ள புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் 'இளங்கலை விளையாட்டு அறிவியல் கல்வியியல்' படிப்பு படித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 4 மாநிலங்கள், 11 நாட்கள், 5 பெண்கள் படுகொலை...சீரியல் கில்லரை கைது செய்து குஜராத் போலீசார் விசாரணை!
இவர் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கும், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே திருவனந்தபுரம் விரைவு ரயில் வந்தபோது அதில் சிக்கி இழுத்து வரப்பட்டு, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போதும் இந்த விபத்து நடந்ததா? எவ்வாறு அவர் ரயில் என்ஜின் முகப்பில் சிக்கினார்? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து, தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால், ரயில் 10 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரல் நோக்கிச் சென்றது. மேலும், அந்த மார்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் 10 நிமிடங்கள் தாமதாக இயக்கப்பட்டன.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்