சென்னை: சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் நேற்று இரவு மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்துள்ளது. இதில் 2 பிரிவுகளாக மாணவர்கள் மோதிக் கொண்டதில், பொருளியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மதுரைவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு லேசான வெட்டு பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ரூட்டு தல விவகாரத்தில் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கிடையே தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பினராக பிரிந்து மோதிக் கொண்ட மாணவர்கள் மத்தியிலான தகராறு நேற்றிரவு மோதலாக மாறியதில், ஒருவர் வெட்டுக்காயம் அடைந்துள்ளது சக மாணவர்களுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், காயம் அடைந்த மாணவரை வெட்டிய மாணவர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து இன்று (புதன்கிழமை) காலை தகவலறிந்த கீழ்பாக்கம் போலீசார், கல்லூரி வளாகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கல்லூரி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை துணை ஆணையர் கோபி, தீவிர விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சென்னை பச்சையப்பா கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், மாணவர்களுக்கு மத்தியில் இத்தகைய மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதிய பைக்கில் ரேஸ் செட்டப்.. கொண்டாட்டத்தில் இளைஞர்கள் - கொத்தாக அள்ளிச் சென்ற போலீஸ்!