சென்னை: மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார்(51), இவரது வீட்டின் அருகே லாவண்யா என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று லாவண்யாவின் வளர்ப்பு நாய் ரமேஷ் குமாரை காலில் கடித்துள்ளது. அதில், காயமடைந்த ரமேஷ் குமாருக்கு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் காலில் 2 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது இதுகுறித்து ரமேஷ் குமாரின் மனைவி தேவி மதுரவாயல் காவல் நிலையத்தில் நாய்களைப் பிடிக்குமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் நாயைப் பிடித்துள்ளனர். மேலும், இதேபோல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. எனவே நாய்களைப் பிடித்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக தமிழ்நாட்டில் நாய் கடிக்கும் சம்பவங்கள் எதிரொலியாக 23 வகையான நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் அவைகளுக்குக் கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்குக் கூட்டிச் செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்த அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது மூக்கு நுனியில் இருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கும் பாதுகாப்பாக அமையும் என பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி தெரிவித்துள்ளது.