சென்னை: சென்னை வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலை ஆற்காடு சாலையாகும். இதில் இன்று அதிகாலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதியில் மெட்ரோ பணி காரணமாக ஏற்கனவே சாலை குறுகலாக இருக்கக்கூடிய நிலையில், திடீரென சாலையில் 9 அடி நீளத்திற்கு பள்ளம் விழுந்து இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
போக்குவரத்து மிகுந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடபழனி கோயிலில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தடுப்புக் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தைச் சீர்செய்து வருகின்றனர்.
ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளத்தைச் சரி செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. மெட்ரோ பணி காரணமாக ஏற்கனவே ஆற்காடு சாலை குறுகலாக உள்ள நிலையில், இந்த பள்ளத்தின் காரணமாக மேலும் சாலை குறுகலாக மாறியுள்ளது. எனவே, இப்பள்ளத்தை விரைவாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித விபத்தும் ஏற்படவில்லை. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மெட்ரோ அதிகாரிகள் அச்சாலையை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மெட்ரோ பணியும், பள்ளத்தாக்கும்: இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராட்சத இயந்திரங்கள் கொண்டு மெட்ரோ பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்று வருவதால், இயந்திரத்தின் அதிர்வில் பள்ளம் விழுந்திருக்கலாம் என முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது.
இவற்றுள் அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை போன்ற மெட்ரோ பணிகள் நடைபெற்ற இடங்களில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு, அதன் பின்னர் அவை சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காக்களூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து: 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! மற்றவர்களின் நிலை என்ன?