சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக, 2024-25ஆம் கல்வியாண்டில் 208 சென்னை தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 24,700 மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா, கொடியசைத்து துவக்கி வைத்த மேயர் பிரியா
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 18, 2024
Read More : https://t.co/0E28PlVYg3#mayorpriya #governmentschool #schoolstudents #tour #Chennai #etvbharattamilnadu @PriyarajanDMK @chennaicorp pic.twitter.com/p2VPvKheNv
அதன் அடிப்படையில், சென்னை பள்ளிகளில் 208 தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 16,366 மாணவர்கள் ஜூலை 2024 இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் 2024 வரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இச்சுற்றுலாவானது திருவொற்றியூர் மண்டலம் தொடங்கி வாரந்தோறும் மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு பேருந்துக்கு சுமார் 55 மாணவர்கள் வீதம், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலமாக முதற்கட்டமாக ரூ.3129 லட்சம் மதிப்பில் 298 பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக 18 சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 1255 மாணவர்கள் மற்றும் ஒரு பேருந்திற்கு 4 ஆசிரியர்கள் என 24 பேருந்துகளில் இன்று (ஜூலை 18) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் மூலமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சென்னை சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சிக்னல் பார்க், காவலர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "கடந்த ஆண்டு இதுபோன்று இல்லாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மழைநீர் வடிகால்வாய் பணிகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவடையும்.
இந்த மழைநீர் வடிகால்வாய் மூலமாக, நீரை வெளியேற்றும் மாம்பலம் பகுதி உள்ளிட்ட அனைத்து கால்வாய் பகுதிகளிலும் நடைப்பெற்றுவரும் மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாகவே மழைநீர் வடிகால்வாய் முகத்துவாரத்தை சீர்செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசு மருந்து அடிக்கும் பணிகள் சென்னை முழுவதும் நடைப்பெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.
இடையும் படிங்க: மக்களே உஷார்... தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!