சென்னையின் மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வானத்தில் விமானப் படை வீரர்கள் தேஜஸ், ரஃபேல் போன்ற போர் விமானங்கள் வாயிலாக நிகழ்த்திய வினோதங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. விழாவில் வானில் நிகழ்த்தப்பட்ட சாகசங்கள் மெரினாவை திருவிழா கோலமாக்கியது.
தொடக்க நிகழ்வு: சாகசத் தொடக்கம்
ஒரு திகைப்பூட்டும் மனிதக் கடத்தல் மீட்பு காட்சியுடன் விமானப் படை நிகழ்வைத் தொடங்கியது. இந்திய விமானப் படையின் கார்டு கமாண்டோ அணியின் அசாத்திய மீட்பு தந்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் திகைப்பை ஏற்படுத்தின.
இந்திய விமானப் படையில் பெண்கள் சக்தி
இந்த ஆண்டின் விமான வான் சாகச கண்காட்சி, பெண்கள் முன்னேற்றத்தை அழகாக எடுத்துக்காட்டியது. சுகோய் Su-30MKI, ரஃபேல், தேஜஸ் போன்ற விமானங்களில் பெண் விமானப் படை வீராங்கனைகள் தங்கள் வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினர். எஸ்.எல். பவானா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங், சிவங்கி சிங் போன்ற அலுவலர்கள் வானில் சாகசங்களை மேற்கொண்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
பரபரப்பு நிறைந்த சாகசங்கள்
இந்திய விமானப் படை வீரர்கள், பேரஷூட் ஜம்ப், மி 17 ஹெலிகாப்டர்களின் ஸ்லிதரிங் ஆபரேஷன், அசாத்தியமான சுகோய் Su-30MKI சாகசங்களை பார்வையாளர்களுக்கு பரிசாக்கி அவர்களைத் திகைப்படையச் செய்தனர். 'லூப் டம்பிள் யா' மற்றும் 'ஸ்னாப் ரோல்ஸ்' போன்ற சாகசங்கள் விமானிகளின் திறமையை காட்டின.
சாரங் ஹெலிகாப்டர் அணியின் ஸ்பெஷல்:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாரங் ஹெலிகாப்டர் அணி, வானில் நிகழ்த்திய ‘யோதா’ குழுவைக் குறிப்பிடும் ‘Y’ வடிவக் காட்சி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையைச் சேர்ந்த விங் கமாண்டர் கோகுல் கிருஷ்ணன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட இந்த காட்சியை கண்டு மக்கள் கரவொலி எழுப்பிப் பாராட்டினர்.
சூரியகிரண் அணி
விமானக் காட்சியின் இறுதியில், சூரியகிரண் அணி 9 விமானங்களுடன் வானில் முத்திரை பதித்தது. சென்னையைச் சேர்ந்த கார்த்திக் இந்த அணியில் முக்கிய இடம் வகித்தார்.
உலக சாதனை
பல லட்சம் மக்களை ஈர்த்த சென்னை விமான வான் சாகசக் காட்சி 2024, உலகின் அதிக மக்களை பார்வையாளர்களாக ஈர்த்த விமான சாகச கண்காட்சி என்ற பெருமையுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
முற்றிலும் ஒரு மாயையான அனுபவமாக இதை மக்கள் ரசித்து பார்த்தனர். தமிழ்நாடு மக்கள் அளித்த பேராதரவைக் கண்டு இந்திய விமானப் படை அவர்களுக்கு நன்றிகளைப் பரிசாக்கினர்.