சென்னை: கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த விரைவு ரயிலில், கரூரைச் சேர்ந்த சென்னையில் பணியாற்றும் பெண் மென்பொறியாளர் கரூரில் ஏறினார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் மென் பொறியாளரின் செல்போனை பிடுங்கிச் சென்றுள்ளனர்.
பெண் மென்பொறியாளர் பின்தொடர்ந்து சென்று தனது செல்போனை கேட்டுள்ளார். அப்போது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த நபர்கள் மென்பொறியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபர்கள் வேறு பெட்டிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், மென்பொறியாளர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள், மென்பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெண் மென்பொறியாளருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மர்ம நபர்களை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக, கரூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் பெயர், அட்டவணை பட்டியலையும் கேட்டுப் பெற்று அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.நகர் குப்பைத் தொட்டியில் தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு: தியாகராய நகர் முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு சந்திப்பில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் எடுக்க வந்தனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர் திருநாவுக்கரசு குப்பைகளை எடுக்கையில், குப்பைத் தொட்டியின் அடியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலி தோட்டாக்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், தூய்மை கண்காணிப்பாளர் பாலாஜியை அழைத்துக் கொண்டு தி.நகர் காவல் உதவி ஆணையரைச் சந்தித்து இருவரும் தோட்டாக்களை ஒப்படைத்தனர். உதவி ஆணையாளர் மற்றும் மாம்பலம் ஆய்வாளர் குப்பை தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது தொடர்பாக விசாரணை செய்தனர்.
சிசிடிவி பதிவின் அடிப்படையிலும் மற்றும் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த பில்லில் இருந்த முகவரியின் அடிப்படையிலும் விசாரித்தபோது, தியாகராய நகர் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வந்து தோட்டாக்களை குப்பைத் தொட்டியில் போடப்பட்டது தெரியவந்தது.
அந்த வீட்டு முகவரிக்குச் சென்று விசாரித்த போது, கடந்த 11 வருடங்களாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (67) என்பவர் Movies Special Effect என்ற பெயரில் அங்கு அலுவலகம் நடத்தி வருவதாகவும், சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய டம்மி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாடகைக்கு விடும் தொழிலை லைசென்ஸ் பெற்று நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது. கடந்த 40 வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், South Indian movies dummy Effect Association உறுப்பினராகவும் உள்ளார்.
நேற்று டம்மி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் அலுவலகத்தில் வைக்கும்போது தவறுதலாக கீழே விழுந்துள்ளன. வீடை சுத்தம் செய்ய வரும் ரேணுகா என்பவர், குப்பையோடு குப்பையாக அள்ளி தெருமுனையில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சை கூட்டு பலாத்கார வழக்கு; மேலும் ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது..!