சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில், முக்கிய 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முக்கிய தீர்மானங்கள்:
- மீண்டும் உயரும் சொத்துவரி: சென்னையில் சொத்து வரியை மீண்டும் உயர்த்த தீர்மானம். ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 6% வரை உயர்த்த முடிவு.
கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பிரதான பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டுக்கு 150%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100%, குடியிருப்புகளுக்கான சொத்துவரி 50% இருந்து 150% உயர்த்தப்பட்டு, அரசாணை 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி 6% வரை உயர்த்தப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
- தூய்மைப் பணியாளர்கள் கூலி உயர்வு: தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.687-யை முதன்மைச் செயலர் தொழிலாளர் ஆணையர் கடிதத்தின் படி ரூ.753 என உயர்த்த முடிவு
- அம்மா உணவகம் புதுப்பிப்பு: சென்னை மாநகராட்சியில் மண்டலம் ஒன்று முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு உட்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்திப் புதுப்பிக்கும் பணிகளுக்கு அனுமதி.
அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அம்மா உணவகத்தை மேம்படுத்திப் புதுப்பிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அம்பத்தூர், அண்ணாநகர், வளசரவாக்கம், பெருங்குடி, மணலி உள்ளிட்ட மண்டலங்கள் வாரியாக சென்னையில் உள்ள 291 அம்மா உணவகங்கள் ரூ.17.6 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- விதி மீறி குப்பை கொட்டுவதற்கான அபராதம் 10 மடங்கு உயர்வு: குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை விதி மீதி பொது இடங்களில் கொட்ட விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்வு
அதாவது, கட்டடக்கழிவுகளைக் 1 டன் வரை கொட்டினால், அபராதம் ரூ.2,000 இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த முடிவு, வியாபாரிகள் குப்பைத் தொட்டி வைக்காமல் இருந்தால், 100 ரூபாயிலிருந்து ரூ.1,000-மாக அபராதத்தை உயர்த்த முடிவு. அதேபோல, மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதற்கான அபராதம் ரூ.200-லிருந்து ரூ.2,000-மாகவும், பொது இடத்தில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் 1,000 ரூபாயிலிருந்து ரூ.5,000-மாக உயர்த்த முடிவு.
- பொதுக் கழிப்பறைகள் சீரமைப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் பொது தனியார் கூட்டாண்மை (PPP) மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
- மண்டலம் 1 முதல் 15 வரை பேருந்து வழித்தடத்தில் புதிய 3D மாடல் பேருந்து நிறுத்த நிழற்குடைகளை அமைக்கும் பணிக்களுக்கு அனுமதி
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக 63 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களை 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி
- மண்டலம் 9 வார்டு 110-ல் அமைந்துள்ள காம்தார் நகர் சாலைக்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் பெயர்; வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உள்ள சூழலில் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்துவது, கால்வாய் சீரமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்