சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூறு வார்த்தைகளைப் பேசி காணொளி வெளியிட்டுள்ள திராவிட நட்புக் கழகத்தின் துணைத் தலைவராக உள்ள ஸ்ரீவித்யா என்பவர் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று (பிப்.24) புகார் அளித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு, தன்னைத்தானே பிரபலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஸ்ரீவித்யா என்பவர் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த காணொளி ஒன்றை ரைட்ஸ் என்ற யூடியூப் சேனலிலும், மை சென்னை 360 என்ற அவரது யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்து விளம்பரம் தேடி வருவதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்கள் தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ் கிறிஸ்டோபர், செயற்குழு உறுப்பினர் பிரவீன் சமாதானம், ஆகியோர் சென்னை வேப்பேரியில் உள்ள மாவட்ட காவல் ஆணையாளரைச் சந்தித்து, ஸ்ரீவித்யா மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை உடனடியாக நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருணாஸ் புகார்: அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் சமீப நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்தும் நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இதையடுத்து ஏ.வி.ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு சினிமா துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நடிகை த்ரிஷாவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த பிப்.21ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நடிகை த்ரிஷா மீதும், தன் மீதும் அவதூறு கருத்துக்களை பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மற்றும் அவர் பேசிய காணொளியை யூடியூபில் பரப்பி வரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் மீண்டும் ஒரு புகாரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றி அவதூறாக பேசும் அந்த வீடியோ காட்சிகள் குறித்து யூடியூபில் பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்ரித் பாரத்: திருச்சி ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு.. மேலாளர் அன்பழகன் தகவல்!