சென்னை: பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவோரம், 5க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வீட்டில் சேரும் குப்பைகளை இதில் கொட்டுவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல், குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து அப்புறப்படுத்த வந்தபோது, குப்பைத் தொட்டியில் பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அந்த பச்சிளங் குழந்தை பெண் குழந்தை எனவும், முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில் பிறந்ததும் யாரேனும் வீசிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறலில் போலீசார் அதிரடி நடவடிக்கை:
சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் அலைப்பேசி எண்ணிற்கு, போலீசார் தகவல் அனுப்புகின்றனர். அபராதத்தைக் கட்டத் தவறினால், கால்சென்டர் வாயிலாக நினைவூட்டுகின்றனர்.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் துவக்கினர். சென்னையில் சோதனை ரீதியாக இந்த நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய போக்குவரத்து போலீசார், "வீடு தேடிச் சென்று அபராத ரசீது தருவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதை எந்த வகையில் சரியாகச் செயல்படுத்த முடிகிறது என்பதைப் பார்த்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
காசோலை மோசடி வழக்கில் பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது:
தமிழ் சினிமாவில் பிரபலத் தயாரிப்பாளராக இருந்து இருப்பவர் சிவசக்தி பாண்டியன். இவர் காதல் கோட்டை, வெற்றிக் கொடி கட்டு, வான்மதி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் திரைப்படம் ஒன்றைத் தயாரித்திருந்தார். அதற்காகப் பிரபலத் தனியார் நிறுவனம் ஒன்றில் சுமார் ரூ.1 கோடியே 70 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தக் கடன் தொகையைத் திருப்பித் தருவதற்காகப் பிரபலத் தனியார் நிறுவனத்திற்குத் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் காசோலை ஒன்றைக் கொடுத்துள்ளார். ஆனால் அதில் பணம் இல்லாததால், வங்கியிலிருந்து காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனால் தனியார் நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதுதொடர்பாக தனியார் நிறுவன தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விசாரணை நடந்து வந்தது. அதில் நீதிமன்றம் போதிய கால அவகாசம் கொடுத்தும், சிவசக்தி பாண்டியன் பணத்தைத் திருப்பித் தருவதற்கான எந்த ஒரு செயலிலும் ஈடுபடாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண ரயில்களின் கட்டணம் குறைப்பு.. பயணிகள் உற்சாகம்..