சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் சில விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலைய பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வரும் அனைத்து விமானங்களும் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. பின்னர், ஓடுபாதையை கவனமாக கவனித்து அதன் பின்பு தான் தரையிறங்குவதற்கு, விமானிகளுக்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அனுமதி கொடுக்கின்றனர்.
இதனால் சென்னையில் வந்து தரை இறங்கும் விமானங்கள் சுமார் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்குகின்றன.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. குறிப்பாக சார்ஜா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய சர்வதேச விமானங்கள், அந்தமான், டெல்லி, மும்பை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் சுமார் 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதையும் படிங்க |
விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் தொடர் மழை காரணமாக தாமதமாக வருவது தான் விமான புறப்பாடு தாமதத்திற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
மழை காரணமாக சில பயணிகளும் தாமதமாக வந்துள்ளனர். மேலும் விமானங்களில் ஏற்றப்படும் பயணிகளின் உடைமைகள் பயணிகளுக்கான உணவு வகைகள் போன்றவைகளும் தாமதமாவதாலும் விமானம் புறப்படுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்படுகிறது என்று விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விமான சேவைகளில் இதுவரையில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.